< Back
உலக செய்திகள்
சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்
உலக செய்திகள்

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

தினத்தந்தி
|
24 Aug 2022 5:02 PM GMT

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அப்போது முதல் ஈராக் மற்றும் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்ளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் சிரியாவின் தெற்கு பகுதியில் ரிப் டிமாஷ்க் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவதளத்தின் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் 'டிரோன்' மூலம் தாக்குதல் நடத்தினர். எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கிழக்கு சிரியாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்களை தெரிவிக்கவில்லை.

அதே சமயம் அமெரிக்காவின் வான்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்