< Back
உலக செய்திகள்
பாஸ்போர்ட் இல்லாமல் பெண் பயணியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற அமெரிக்க விமான நிறுவனம்..!!
உலக செய்திகள்

பாஸ்போர்ட் இல்லாமல் பெண் பயணியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற அமெரிக்க விமான நிறுவனம்..!!

தினத்தந்தி
|
7 May 2023 7:16 PM IST

பாஸ்போர்ட் இல்லாமல் பெண் பயணியை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது.

லண்டன்,

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழிப்பது, விமான பணிப்பெண்ணிடம் குடிபோதையில் சண்டை போடுவது அதுவும் சமீபத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டியது போன்ற சம்பவங்கள் சமீப மாதங்களாக நடந்து வருகின்றன.

ஆனால், அமெரிக்காவில் நடந்த சம்பவம் வேறு வகையை சேர்ந்தது. இதில், பாஸ்போர்ட்டே இல்லாமல் பெண் பயணி ஒருவரை, அமெரிக்க விமான நிறுவனம் வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரை சேர்ந்தவர் எல்லிஸ்-ஹெப்பார்டு. ஜாக்சன்வில்லி பகுதியில் இவருக்கு மற்றொரு வீடு உள்ளது. இதனால், அவர் 6 வாரங்களுக்கு ஒரு முறை நியூ ஜெர்சியில் இருந்து ஜாக்சன்வில்லி நகருக்கு விமானத்தில் பறப்பது வழக்கம்.

நம்மூரில் பஸ்சில் செல்வது போன்று அவர் விமானத்தில் சென்று வந்து உள்ளார். இதற்கு அமெரிக்காவின் பிரன்டியர்ஸ் விமான நிறுவனத்தில் சென்று உள்ளார். அடிக்கடி இதிலேயே நாங்கள் செல்வோம் என எல்லிஸ் கூறுகிறார்.

சம்பவம் பற்றி அவர் கூறும்போது, நான் எப்போதும் பிலடெல்பியாவில் இருந்து ஜாக்சன்வில்லிக்கு பயணிப்பது வழக்கம். ஏஜெண்ட் ஒருவர் வழியாக சமீபத்திய இந்த பயணம் மேற்கொள்வது அமைந்தது.

விமானத்தில் ஏற இவர் வருவதற்கு முன் மற்ற எல்லோரும் ஏறி, அமர்ந்து விட்டனர். இதனால், அவசரகதியில் எல்லிஸ் வந்து உள்ளார். அவரை பார்த்த ஏஜெண்ட் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப்படுத்தி உள்ளார். விமானத்தில் ஏறுவதற்கான சீட்டை தரும்படி கேட்டு உள்ளார்.

அதற்கு எல்லிஸ், அதற்கான பத்து நடைமுறைகளை முடித்து விட்டேன் என கூறியுள்ளார். உடனே, அந்த ஏஜெண்ட் நீங்கள் எல்லீசா? என கேட்டு விட்டு, சரி, சரி போங்கள் என கூறியுள்ளார்.

ஒரு வழியாக விமானத்தில் அமர்ந்தபோது, விமான பணிப்பெண் அவரை அணுகி, ஜாக்சன்வில்லி விமானம் இந்த நுழைவு வாசலுக்கு பதிலாக மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் ஏறியுள்ள இந்த விமானம் ஜமைக்கா நாட்டுக்கு போகிறது என பணிவுடன் கூறியுள்ளார்.

ஆனால், எல்லிஸ் சிரித்தபடியே, நானும் ஜமைக்கா போக வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், எங்கள் ஊரிலேயே பீச் எல்லாம் இருக்கிறது என நகைச்சுவையாக கூறியுள்ளார். இப்போது பணிப்பெண், நன்றாக கவனியுங்கள். இந்த விமானம் ஜமைக்கா செல்கிறது என அழுத்தி கூறியுள்ளார்.

அவர் கேலி எதுவும் செய்யவில்லை என பணிப்பெண்ணின் முகத்தில் இருந்து தெரிந்தது. அதன்பின்பே, எல்லிசுக்கு தன்னிடம் ஜமைக்கா செல்ல பாஸ்போர்ட் இல்லை என உணர்ந்து உள்ளார். ஏனெனில், அவர் உள்ளூரிலேயே பயணிக்க வேண்டி இருந்தது.

பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் இருந்து ஜமைக்காவில் இறங்கவும் முடியாது. இதனால், பரிதவித்த அவர் பின்பு, விமானம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் அமர வைக்கப்பட்டார். அவருடன் பணிப்பெண்ணும் பல மணிநேரம் அமர்ந்து உள்ளார்.

அதன்பின்னர், பிலடெல்பியா செல்லும் விமானம் வரும் வரை அதில் காத்திருந்து உள்ளார். இதுபற்றி பிரன்டியர் விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அந்த பெண் தவறான விமானத்தில் ஏறிய சம்பவத்திற்காக வருந்துகிறோம். மன்னிப்பும் கோரியுள்ளோம். அவருக்கான பணம் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது. நஷ்ட ஈடும் வழங்கப்பட்டு விட்டது. விமான நிலைய அதிகாரிகளிடம் இந்த விவகாரம் கூறப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்