மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு வீடியோ...!
|மாலத்தீவில் அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் இணைந்து யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மெல்,
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் அருகே அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவிலும் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சி மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கால்பந்து மைதானத்தில் இன்று காலை யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது.
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நபர்கள் மீதும் அந்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதோடு நிகழ்ச்சியையும் நிறுத்தியது. இந்த சம்பவம் மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகா நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யும் நோக்கத்தில் மைதானத்திற்குள் 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து யோகா செய்துகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கும்பல் மைதானத்திற்குள் நுழைவதை கண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனாலும், அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாலித்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
யோகா நடைபெற்ற மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக நுழையும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.