< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்; பலி 1,136 ஆக உயர்வு
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்; பலி 1,136 ஆக உயர்வு

தினத்தந்தி
|
30 Aug 2022 2:23 PM IST

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து ஏற்பட்ட பேரிடரான வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளுக்கு 1,136 பேர் உயிரிழந்து உள்ளனர்.



லாகூர்,



பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ள பாதிப்புகளால் நாடு உருக்குலைந்து போன நிலையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நன்கொடைகளை அளிக்கும்படி ஆளும் அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 1,136 ஆகவும், 1,634 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

57 லட்சத்து 73 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று அந்த கழகம் தெரிவித்து உள்ளது. எனினும், பாகிஸ்தானில் 7 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

20 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் அளவிலான பயிர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டும், 3,457 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் முற்றிலும் அழிந்தும் போயுள்ளன. 157 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.

பேரிடர் மேலாண் கழகங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையே ஒரு பாலம் போன்று மத்திய அரசு செயல்படும் என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பொதுமக்களுக்கு தனது டுவிட்டர் வழியே ஆறுதல் அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்