அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 மாணவர்கள் பலி
|அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே நகரில் வர்ஜீனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சிறந்த பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழத்துக்கு வெளியே நடந்த போட்டியில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் பல்கலைக்கழகத்துக்கு திரும்பினர்.
இந்த பஸ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்தபோது அங்கிருந்த மாணவர் ஒருவர் பஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பஸ்சில் இருந்த மாணவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
3 மாணவர்கள் பஸ்சுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த மாணவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.