அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: பேராசிரியர் பலி
|வட கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கொல்லப்பட்டார்.
சேப்பல் ஹில், வடக்கு கரோலினா,
அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பேராசிரியர் பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகநபர் மற்றும் ஆசிரியரின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.