< Back
உலக செய்திகள்
நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு
உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு

தினத்தந்தி
|
6 Oct 2022 4:32 PM IST

நியூசிலாந்து பிரதமரை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார்.


ஆக்லாந்து,


நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம்.

எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம் என கூறியுள்ளார்.

இந்த உரையின்போது, ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறியதுடன், ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கையிலெடுத்து கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விசயம் என கூறியுள்ளார்.

5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில், 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என்றும் உரையின்போது, மத்திய மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார்.

இதன்பின்பு, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்-னை மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.

அதற்கு முன் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரி நனையா மகுதாவையும் அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்ட உத்தரவால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டார்.

நியூசிலாந்தில் படிக்க ஆர்வமுடன் உள்ள இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்தும்படி அந்நாட்டு மந்திரி நனையாவிடம் அவர் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்