சூடானில் தொடரும் உள்நாட்டு போர்.. நாட்டையே அழித்துவிடும் அபாயம்.. ஐ.நா. எச்சரிக்கை
|இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
சூடானில் ராணுவத்திற்கு தலைமை தாங்கும் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவ அதிரடிப் படைகளின் தலைவரான முகமது ஹம்தான் ஹெமேதி டகாலோ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு பயந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தத்தையும் கொண்டுவருகிறது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அவ்வப்போது மீறப்படுவதால் பேச்சுவார்த்தை முடங்கி உள்ளது.
இந்நிலையில், சூடானில் நடைபெறும் போர் மற்றும் மக்களின் பசிக்கொடுமை ஆகியவை நாட்டையே அழித்துவிடும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியிருப்பதாவது:-
சூடான் உள்நாட்டுப் போர், மனிதாபிமான அவசரநிலையை தூண்டுகிறது. தீவிரமான மோதல், பசி, நோய் மற்றும் மக்கள் இடப்பெயர்ச்சி ஆகியவை முழு நாட்டையும் விழுங்கிவிடும் அபாயம் உள்ளது.
சில இடங்களில் ஏற்கனவே உணவு தீர்ந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.