< Back
உலக செய்திகள்
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது ஐ.நா.சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை: ஐ.நா கடும் கண்டனம்!
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது ஐ.நா.சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை: ஐ.நா கடும் கண்டனம்!

தினத்தந்தி
|
30 Sept 2022 11:25 AM IST

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது.

நியூயார்க்,

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது.

உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர் மாளிகையில் கோலகலமாக நடைபெறும் போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் புதின் வெளியிடுவார். ரஷிய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷிய தலைநகரில் கூடியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குட்டரெஸ் ரஷியாவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், ரஷியாவின் நடவடிக்கைகள் உக்ரைனின் பிராந்தியத்தில் அமைதியை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது. ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது, ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும்" என்று தெரிவித்தார்.

மறுமுனையில், ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதவத்கு:- "இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையின் ஜார்ஜிய மண்டபத்தில் 15:00 மணிக்கு ரஷியாவில் புதிய பிரதேசங்களை இணைத்தல் தொடர்பான கையெழுத்திடும் விழா நடைபெறும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்