ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
|ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. அதில், காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் பிரதிக் மாத்துர் பேசியதாவது:-
ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களை விவாதிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், தேவையின்றி காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி உள்ளது.
காஷ்மீர், தொடர்ந்து இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க இயலாத பகுதியாக நீடிக்கும். இதை பாகிஸ்தான் பிரதிநிதி ஏற்றுக்கொண்டாலும், நிராகரித்தாலும் இதுதான் உண்மை நிலவரம். எனவே, பொய்த்தகவல்களை கூறி, பன்னாட்டு அமைப்பின் புனிதத்தன்மையை தவறாக பயன்படுத்தும் மோசமான பழக்கத்துக்காக பாகிஸ்தானுக்கு அனைவரும் கூட்டாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.