ஒப்பந்தங்களை மீறி ரஷியா தாக்குதல் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
|ரஷியா ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்
கீவ்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 150-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.
இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர்.
இந்த சூழலில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்ட சில மணி நேரத்துக்குள்ளாக ரஷிய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின.
கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வௌியுறவு அமைச்சகம் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தேவையான அனைத்து தூதரக சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியா ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "ரஷியாவின் இந்த தாக்குதல் ஒன்றை மட்டும் நிரூபிக்கிறது.. ரஷியா என்ன சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும், அதைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கான வழிகளைக் இது காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.