< Back
உலக செய்திகள்
கைத்துப்பாக்கியுடன் உலா வரும் உக்ரைன் அதிபர்; எதற்காக...? என பேட்டி
உலக செய்திகள்

கைத்துப்பாக்கியுடன் உலா வரும் உக்ரைன் அதிபர்; எதற்காக...? என பேட்டி

தினத்தந்தி
|
30 April 2023 2:22 PM IST

ரஷிய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேனலுக்கு ஜெலன்ஸ்கி பேட்டி அளித்து உள்ளார்.

கீவ்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு முன் ரஷியாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால், உக்ரைனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், நடந்த இந்த பெரிய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருக்கிறார். இதுபற்றி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 1+1 என்ற தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அவர் பேட்டியில் கூறும்போது, கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும். உக்ரைனின் அதிபர் ரஷியர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற தலைப்பு செய்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

ரஷியர்களிடம் சிறை பிடிக்கப்பட்டால், அது அவமதிப்பு ஆகும் என்று அவர் உறுதிப்பட கூறினார்.

போரின் தொடக்கத்தில் ரஷிய உளவு பிரிவினர் கீவ் நகரை தாக்க முயற்சித்தனர். எனினும், உக்ரைன் படைகள் அதனை முறியடித்தன. இதனால், பங்கோவா தெருவுக்குள்ளேயே ரஷிய படைகளால் நுழைய முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த பகுதியிலேயே அதிபர் அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு முறை நடந்த, கீவுக்குள் நுழைவதற்கான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, அவர்கள் உள்ளே நுழைந்து விட்டால், நிர்வாகம் அவர்களால் கைப்பற்றப்பட்டால், நாங்கள் இப்போது இங்கிருக்க முடியாது.

ஆனால், ஒருவரையும் அவர்கள் சிறை பிடிக்க முடியாது. அந்தளவுக்கு படையினர் தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இறுதிவரையிலான போரை நாங்கள் நடத்துவோம் என கூறியுள்ளார்.

ரஷிய படைகளிடம் சிறை பிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்து கொள்வீர்களா? என்ற கேள்வியை அவர் நிராகரித்து உள்ளார். இல்லை. இல்லை. நான் துப்பாக்கியால் என்னை சுட்டு கொள்ளமாட்டேன். திருப்பி சுடுவேன். அது நிச்சயம் என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்