உக்ரைன் போர்; நேட்டோ நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை
|நேட்டோ நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோ,
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022-ல் அந்த நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்து போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் அளிப்பதால் ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரின் போக்கு தற்போது ரஷியாவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்த போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அதே சமயம், ரஷியா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் எண்ணுவது தவறு என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் என்று தெரிவித்துள்ள புதின், ரஷியாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.