உக்ரைன் போர்: தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் மீண்டும் தாக்குதல்
|உக்ரைனில் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.
கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக போர் தொடுத்து வரும் ரஷியா, ஆரம்பத்தில் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியது. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் கீவ் நகரில் இருந்து பின்வாங்கின. இதனால் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக கீவ் நகரில் எந்த தாக்குதல்களும் இன்றி அமைதியான சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ரஷிய படைகள் நேற்று திடீரென மீண்டும் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் கீவ் நகரில் உள்ள 2 குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் அந்த குடியிருப்பு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாகவும் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார். இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே கடந்த சில வாரங்களாக நடந்து வந்த கடுமையான சண்டைக்கு கிழக்கு உக்ரைன் நகரமான செவிரோடோனெட்ஸ்க் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு கிழக்கு உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.