உக்ரைன் மீதான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய ராணுவம்
|ரஷிய ராணுவம் போரில் தற்போது வேகமாக முன்னேறி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி வருகிறது.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயம் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் ரஷிய ராணுவம் போரில் தற்போது வேகமாக முன்னேறி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.