சிறைப்பிடிக்கும் வீரர்களை சித்திரவதை செய்யும் ரஷியா - உக்ரைன் குற்றச்சாட்டு
|சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கீவ்,
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியா போரை தொடங்கியது. போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் ரஷிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
அதோடு லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரஷியா பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அந்த வகையில் உக்ரைனில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தற்காலிக சிறைகளில் இருக்கும் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. அது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் "உக்ரைனிய ராணுவ வீரர் மைக்கைலோ டியானோவ் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். அவரது சக போர் கைதிகள் சிலர் இன்னும் ரஷியாவின் பிடியில் இருக்க, இவர் ரஷிய சிறையிலிருந்து தப்பினார். போர் கைதிகள் குறித்த ஜெனிவா உடன்படிக்கைகளை ரஷியா இப்படித்தான் கடைப்பிடிக்கிறது. நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷியா இப்படித்தான் தொடர்ந்து வருகிறது" என கூறி ராணுவ வீரர் மைக்கைலோ டியானோவின் முந்தையை மற்றும் தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.