உக்ரைன் தாக்குதல்: 50 ரஷிய வீரர்கள் பலியானதாக தகவல்
|உக்ரைனில் நடந்த பயங்கர தாக்குதலில் 50 ரஷிய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீவ்,
அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 9 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ஏவுகணை விழுந்து வெடித்தது. ஏவுகணையை வீசியது ரஷியாதான் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், இது தொடர்பாக போலந்து நாட்டுக்கான ரஷிய தூதரகத்துக்கு போலந்து அரசு சம்மன் அனுப்பியது. எனினும் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் நடந்த பயங்கர தாக்குதலில் 50 ரஷிய வீரர்கள் பலியானதுடன் பலர் படுகாயம் அடைந்ததாக உக்ரைன் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி லுகான்ஸ்க் பிராந்தியத்திற்கு அருகில் அமைந்துள்ள டெனிஸ்னிகோவ் கிராமத்தில் உக்ரைன் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷியா பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மேல் விவரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
இதனிடையே அமெரிக்கா உக்ரைனுக்கு 80 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ராக்கெட் அமைப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.