பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் திடீர் பயணம்: ஆயுத சப்ளைக்கு வேண்டுகோள்
|ரஷியாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கீவ்,
கிழக்கு ஐரோப்பிய பகுதியில் அமைந்த உக்ரைன் நாட்டின் நேட்டோவில் இணையும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஒருபுறம் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆயுத, நிதி சார்ந்த உதவிகள் கிடைத்து வருகின்றன. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த போரில் ஆயுத உதவிகள் வழங்கும்படி, இஸ்ரேல் அரசிடம் உக்ரைன் அரசு கடந்த ஆண்டு கோரியிருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை இஸ்ரேல் ஏற்காதது அதிர்ச்சி அளிக்கிறது என ஜெலன்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷிய படையெடுப்பை முறியடிக்க போர் விமானங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார்.
ரஷிய போரின் முதல் நாளில் இருந்து ஆதரவு அளித்து வரும் பிரிட்டன் மக்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் அந்நாட்டு ராணுவ தளத்தில் இருந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, உக்ரைனுக்கு உதவ போர் விமானங்களை வழங்குவது பற்றி, பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இடம் பெற்றது என கூறினார்.
உக்ரைனுக்கு குறுகிய காலத்தில் ஆயுதங்களை வழங்க வேண்டும். ஆனால், நீண்ட காலத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என சுனாக் கூறினார். ஜெலன்ஸ்கி கூறும்போது, விமானங்கள் மட்டுமின்றி, வெடிபொருட்கள் மற்றும் நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து வகையான ஆயுதங்களும் தேவை. அவையின்றி, நல்லது எதுவும் நடைபெறாது. பிரிட்டன் பயணம் பயனுள்ள வகையில் இருந்தது என கூறியுள்ளார்.
அதன்பின்னர், அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு சென்றார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். ஜெர்மனி நாட்டு அதிபர் ஓலப் ஸ்கால்சுடனும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு நடந்தது. இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான வரவேற்பு அளித்து, ஜெலன்ஸ்கியை எலிசீ அரண்மனைக்குள் அழைத்து சென்றனர்.
அதன்பின்னர், ஜெலன்ஸ்கிக்கு இரவு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்ற அவர், அதிபர் பைடனை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ரஷிய போருக்கு பின்னர் ஜெலன்ஸ்கி மேற்கொள்ளும் 2-வது வெளிநாட்டு சுற்று பயணம் இதுவாகும்.