#உக்ரைன் லைவ் அப்டேட்ஸ்: டான்பாஸ் பகுதியில் ரஷியா தீவிர தாக்குதல்: ஆயுதங்கள் கேட்டு நட்பு நாடுகளிடம் உதவி கோரிய உக்ரைன்..!
|உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 4-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் போர் குறித்த அண்மைச்செய்திகளை கீழ் காணலாம்.
Live Updates
- 24 May 2022 8:08 PM IST
எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை கைவிட ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 300 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.
- 24 May 2022 4:03 PM IST
டான்பாஸ் பகுதியில் ரஷியா தீவிர தாக்குதல்: ஆயுதங்கள் கேட்டு நட்பு நாடுகளிடம் உதவி கோரிய உக்ரைன்..!
உக்ரைன் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தனது நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் வேண்டும் என கோரியுள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் வெளியுறவுத் துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, ரஷிய ராணுவம் 'மிகவும் இரக்கமற்ற முறையில் டான்பாஸ் போர் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் இல்லை. நட்பு நாடுகள் எங்களுக்கு ஆயுத விநியோகத்தை விரைவு படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
- 24 May 2022 3:31 PM IST
உக்ரைன் வெற்றியை உறுதி செய்ய அனைத்தையும் செய்வோம்: ஐரோப்பிய ஆணையம்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன், இந்தப் போரில் உக்ரைன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் உக்ரைன் வெற்றிக்கு தேவையான அனைத்தையும் ஐரோப்பிய ஆணையம் செய்யும் எனவும் தெரிவித்தார். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஆணைய தலைவர் இவ்வாறு பேசினார்.
- 24 May 2022 1:45 PM IST
என்ன தான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி ஆதங்கம்
என்ன தான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி ஆதங்கம்
தனது வீடு இடிந்து தரைமட்டமாகியிருப்பதைப் பார்த்த கோபத்தில், உக்ரைனின் பக்முட் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், அவ்வளவு பெரிய ரஷியா உங்களுக்குப் போதவில்லையா என்று அதிபர் விளாதிமிர் புதினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா அவர்களுக்குப் போதவில்லையா என்ன? ஏன் இப்படி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்? என்றும் கூறினார். இந்த தாக்குதலில் மரியாவின் வீடு மட்டுமல்ல, அவரது அக்கம் பக்கம் வீடுகளும் தலைமட்டமாகியுள்ளன.
- 24 May 2022 10:57 AM IST
நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர்,உரையாற்றும் போது,
'உக்ரைனியர்களின் வாழ்வுரிமையை' ரஷியா பறிக்க விரும்புவதாக அதிபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ரஷியா "மொத்தப் போரை" நடத்தி வருவதாகவும், "நம்மிடம் உள்ள அனைத்தையும் ரஷியா எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறி உள்ளார்.