புதினின் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய கப்பலை தகர்த்த உக்ரைன்; வீடியோ வெளியீடு
|உக்ரைன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷியாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கியது.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது.
கருங்கடல் பகுதியில் ரஷியாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்நிலையில், அதிபர் புதினின் புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்து உள்ளது.
இதுபற்றி உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், உக்ரைனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷியாவின் ரோந்து கப்பலை தாக்கியது.
இதில், ரூ.538 கோடி மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியன. இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளது.