மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி - ரஷியா தகவல்
|ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாஸ்கோவை நோக்கி வந்த டிரோன் ஒன்று நகரின் வெளிப்புற பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதே போல், ரஷியாவின் தென்மேற்கில் உள்ள பிரையான்ஸ்க் பகுதியின் கவர்னர் அலெக்ஸாண்டர் மோகோமாஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 12 டிரோன்களை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் 2 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.