கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு
|கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.
இந்தநிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்து வருவதுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது உக்ரைனின் நாசவேலை என்ற ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷிய படையினர் 1.5 கிமீ மின் கம்பிகளை அகற்றி விட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.