< Back
உலக செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரத்தின் மூலம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரசியல்வாதி

கோப்புப்படம் AFP

உலக செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரத்தின் மூலம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரசியல்வாதி

தினத்தந்தி
|
1 March 2024 4:48 PM IST

இடைத்தேர்தலில் 39.7 சதவீத வாக்குகள் பெற்று ஜார்ஜ் காலோவே வெற்றி பெற்றார்.

லண்டன்,

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள ரோச்டேல் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இங்கிலாந்து அரசியல்வாதியான ஜார்ஜ் காலோவே, அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.

தொழிலாளர் கட்சியில் (Labour Party) தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய காலோவே, ஈராக் போரில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக 2003-ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2019-ல் தனது சொந்த தொழிலாளர்கள் கட்சியை (Workers Party) நிறுவினார்.

இந்த நிலையில் ரோச்டேல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி லாய்டு கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காலோவே போட்டியிட்டார்.

அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காசா பகுதியில் நடந்து வரும் மோதல்கள் குறித்து தீவிரமாக பேசினார். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தார். இந்த சம்பவத்தை இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் கையாண்டதை விமர்சித்தார். இதன் காரணமாக ரோச்டேலின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள முஸ்லீம் வாக்காளர்களிடையே அவருக்கு ஆதரவு கிடைத்தது.

இதன் மூலம் இடைத்தேர்தலில் ஜார்ஜ் காலோவே, 39.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் முக்கிய வேட்பாளரான டேவிட் டுல்லி 21.3 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய காலோவே தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ம் ஸ்டார்மரைப் பார்த்து, "இது காசாவுக்கானது. நீங்கள் விலை செலுத்தியுள்ளீர்கள். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலும், காசா பகுதியிலும் தற்பொழுது நடக்கும் பேரழிவை செயல்படுத்துவதிலும், ஊக்குவிப்பதிலும், மறைப்பதிலும் நீங்கள் ஆற்றிய பங்கிற்கு அதிக விலை கொடுப்பீர்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்