< Back
உலக செய்திகள்
புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்த இங்கிலாந்து அரசு மும்முரம்..!
உலக செய்திகள்

புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்த இங்கிலாந்து அரசு மும்முரம்..!

தினத்தந்தி
|
11 Sept 2023 7:46 PM IST

பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (பிஏ.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி உள்ளது.

இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது. "முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்" என இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

"கொரோனா வைரஸ் பிஏ.2.86 மாறுபாட்டின் பரவும் தன்மை, தாக்கும் தீவிரம் மற்றும் மருந்துகளுக்கு எதிராக போரிடும் சக்தி ஆகியவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததால், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது," என இங்கிலாந்தின் தேசிய சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ரேணு பிந்த்ரா கூறியுள்ளார்.

"வைரஸ்-இன் புது மாறுபாடு குறித்து பரவும் கவலை கொள்ள செய்யும் தகவல்களால், தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தாங்களாகவே அதனை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என தேசிய சுகாதார சேவை அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குனர் டாக்டர். ஸ்டீவ் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார். "வயதானவர்களும், நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க தடுப்பூசி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

எனவே, அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தகுதியுள்ள தங்களின் அன்புக்குரியவர்களையும் செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்" என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு சக்தித்துறை தலைவர் டாக்டர். மேரி ராம்சே கூறினார்.

இரு தினங்களுக்கு முன் இங்கிலாந்தின் நார்போல்க் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்த 38 பேரில் 33 பேருக்கு இந்த புது தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இருப்பினும், இதுவரை இப்புது தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கொரோனா பெருந்தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டதற்காக உலக சுகாதார அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்