50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்
|தந்தை பீட்டரின் மோசமான நிதி நிலைமையை கண்டறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மகனின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்தது.
லண்டன்:
இங்கிலாந்தின் நோர்போக் மாவட்டம் அட்டில்பரோ பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பிக்கெல் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவரது தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நினைவாற்றல் குறைந்த நிலையில் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட மரணப் படுக்கையில் இருந்ததால், அவரது வீடு மற்றும் நிதிகளை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை மகனான டேவிட் பிக்கெல் பெற்றிருக்கிறார்.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டேவிட் பிக்கெல் அனைத்து சொத்துக்களையும் படிப்படியாக காலி செய்துள்ளார். வங்கிக் கணக்கில் உள்ள தொகையை எடுத்ததுடன், முதலீட்டு பத்திரங்களை பணமாக மாற்றியும், வீட்டை விற்றும் செலவழித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 480,201 பவுண்டுகள் (ரூ.5 கோடி) ஆகும்.
தந்தையை முதியோர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவருக்கு தனிப்பட்ட செலவுக்கு பணம் கொடுக்காமலும், முதியோர் இல்ல பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாமலும் இருந்துள்ளார். இதனால் கடன்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
85,000 பவுண்டுகளுக்கு மேல் (ரூ.89 லட்சம்) கட்டணம் நிலுவையில் இருந்ததால் அவரை முதியோர் இல்லத்திலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பீட்டரின் மோசமான நிதி நிலைமையை கண்டறிந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அவரது சொத்து கணக்கை சரிபார்த்தபோது மகனின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்தது.
இதற்கிடையே 2021ம் ஆண்டு பீட்டர் பிக்கெல் மரணம் அடைந்தார். அப்போது அவரிடம் வெறும் 48 பென்ஸ் (ரூ.50) மட்டுமே இருந்துள்ளது. பீட்டர் தனது சொத்துக்களை பிரித்து வாரிசுகள் 16 பேருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தார். அது நிறைவேறாமல் போனது.
அவரை ஏமாற்றிய மகன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதான தந்தையை ஏமாற்றி மொத்த சொத்தையும் சுருட்டிய மகன் டேவிட் பெக்கெலுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.