< Back
உலக செய்திகள்
உலக பருவநிலை உச்சி மாநாட்டிற்காக தயாராகும் துபாய் எக்ஸ்போ நகரம்
உலக செய்திகள்

உலக பருவநிலை உச்சி மாநாட்டிற்காக தயாராகும் துபாய் எக்ஸ்போ நகரம்

தினத்தந்தி
|
11 March 2023 11:19 PM IST

வருகிற நவம்பர் மாதம் தொடங்கும் உலக பருவநிலை உச்சி மாநாட்டிற்காக துபாய் எக்ஸ்போ நகரம் தயாராகி வருகிறது.

ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு

உலக அளவில் பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்துவதால் வெளியாகும் அதிகமான புகை காரணமாக உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாறுபாடு காரணமாக வெப்ப அலைகள், வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை அழிவுகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் ஒரே மாதிரியான கருத்தை கொண்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு ஐ.நா. சார்பில் பருவநிலை உச்சி மாநாடு கடந்த 1992-ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் தொடங்கி பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.

தற்போது அமீரகம் பருவநிலை மாறுபாடு குறித்த நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு அமீரகத்தில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாநாடு வருகிற நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாய் எக்ஸ்போ நகரம்

கடந்த ஆண்டு மே மாதம் அமீரகம் சார்பில் ஐ.நா.வின் 28-வது பருவநிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் அப்போது எங்கு நடைபெறும் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் துபாயில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் எக்ஸ்போ 2020 என்ற உலக கண்காட்சியானது 6 மாத காலத்திற்கு உலகை ஒருங்கிணைத்த அதிநவீன மற்றும் தனித்துவமான இடமாக விளங்கும் பகுதியில் இதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்போ 2020 மற்றும் சி.ஓ.பி 28 ஆகிய இரண்டும் ஒரே விதமான இலக்குகளை உடையது.

அதேபோல எக்ஸ்போ 2020 கண்காட்சியின் 'மனங்களை இணைப்பது மற்றும் எதிர்காலத்தை உருவக்குவது' என்ற கருப்பொருள் பருவநிலை உச்சி மாநாட்டுக்கும் பொருந்துவதாக உள்ளது. எனவேதான் துபாய் எக்ஸ்போ நகரம் இதனை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமீரக அதிபர் குறிப்பிட்டார். தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்று எரிசக்தி

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி நடந்தபோது அங்கு மாற்று எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலான கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்ற வளாகங்கள் தற்போது உலக பருவநிலை உச்சி மாநாட்டிற்கு தயாராகி வருகிறது. எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் தற்போது மலர்ச்செடிகள் பூத்து குலுங்குகிறது.

பசுமையாக காட்சியளிக்கும் வகையிலான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. குறிப்பாக நிலைத்தன்மையை வலியுறுத்தும் வகையிலான வளாகங்கள் எக்ஸ்போ நகரில் தயாராகிறது.

மேலும் செய்திகள்