அமீரக அதிபருடன் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி சந்திப்பு
|அமீரக அதிபரை பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி சந்தித்தார்.
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக அசிம் முனிரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் அமீரகத்துக்கு வருகை புரிந்தார். அபுதாபியில் உள்ள கசர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி அசிம் முனிரை வரவேற்றார்.
அப்போது அமீரக அதிபர் புதிய ராணுவ தளபதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அமீரக அதிபரின் வாழ்த்துகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி தனது நன்றியை தெரிவித்தார். தொடர்ந்து பாதுகாப்பு துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.
துபாயில் உள்ள ஜாபில் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உடன் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு துணை அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உடன் இருந்தார்.