அயர்லாந்தில் கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து; 10 பேர் பலி
|அயர்லாந்தில் கியாஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கியாஸ் நிலையம்
அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனகல் நகரில் கிரீஸ்லோவ் என்கிற சிறிய கிராமம் உள்ளது. இங்கு கார்களுக்கு கியாஸ் நிரப்பும் கியாஸ் நிலையம் உள்ளது. இந்த கியாஸ் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கியாஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. கியாஸ் நிரப்புவதற்காக கார்கள் வரிசையில் காத்திருந்தன.
பயங்கர வெடிவிபத்து
அதேபோல் தபால் நிலையத்திலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் கியாஸ் நிலைய கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்து தரைமட்டமானது. கார்களில் கியாஸ் நிரப்ப காத்திருந்தவர்களும், தபால் நிலையத்தில் இருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
10 பேர் பலி
மேலும் இந்த பயங்கர வெடிப்பில் கியாஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் இடிபாடுகளில் இருந்து 10 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் இரங்கல்
இதனிடையே கியாஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "இது டோனகல் மற்றும் முழு நாட்டுக்கும் கருப்பு நாள். இந்த துக்ககரமான உயிர் இழப்பைக் கண்டு கிரீஸ்லோவில் உள்ள மக்களைப் போலவே இந்த நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்" என்றார்.