ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக்கொலை... இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது
|ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர், அவரது நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன்,
அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா வந்தார். அவர் மெல்போர்னில் எம்.டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த சில மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த அரியானாவை சேர்ந்த அபிஜித் (26), ராபின் கார்டன் (27) என்ற சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி அபிஜித்தும், ராபினும் சேர்ந்து நவ்ஜீத்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். அதைத்தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்டோரியா போலீசார் விரைந்து சென்று நவ்ஜீத் சந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அபிஜித், ராபின் கார்டனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நவ்ஜீத் சந்துவின் மாமா யஷ்வீர் கூறுகையில், வாடகை பிரச்சினையால் இந்த கொலை நடந்துள்ளது. நவ்ஜீத்துடன் தங்கியிருந்த அரியானாவை சேர்ந்த மாணவர்கள் தான் கத்தியால் குத்தினர் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர், அவரது நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.