ஈரானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
|ஈரானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரம் புக்கன். இங்குள்ள குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது சமயலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கி கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.