< Back
உலக செய்திகள்
இஸ்ரேலை பயங்கரவாத நாடு என குறிப்பிட்ட துருக்கி அதிபர்
உலக செய்திகள்

இஸ்ரேலை 'பயங்கரவாத நாடு' என குறிப்பிட்ட துருக்கி அதிபர்

தினத்தந்தி
|
16 Nov 2023 2:02 AM GMT

எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அங்காரா,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதனிடையே காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அந்த மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "ஒரு நகரத்தையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும் காசாவில் கொடூரமான தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் சர்வதேச கோர்ட்டில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெதன்யாகு கூறுகையில், "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்ரேலை பயங்கரவாத நாடு என்று கூறுகிறார். ஆனால் துருக்கி கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். இவர்களிடம் இருந்து எந்த அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்