< Back
உலக செய்திகள்
சிரியாவில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 11 ராணுவ வீரர்கள் பலி

Image Courtesy: AFP 

உலக செய்திகள்

சிரியாவில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 11 ராணுவ வீரர்கள் பலி

தினத்தந்தி
|
18 Aug 2022 6:30 AM IST

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபனே நகரில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

டமாஸ்கஸ்,

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை துருக்கி அரசு பயங்கரவாதிகளாக கருதுகிறது. இதன் காரணமாக குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு படைகள் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபனே நகரில் நேற்று முன்தினம் இரவு துருக்கி ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சிரிய அரசு படைகளின் ராணுவ சோதனை சாவடி மீது குண்டுகள் வீசப்பட்டதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் அதை மறுத்துள்ள துருக்கி ராணுவம், குர்து போராளிகள் துருக்கி பிராந்தியத்தில் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும், அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்