< Back
உலக செய்திகள்
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்: 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது
உலக செய்திகள்

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்: 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது

தினத்தந்தி
|
4 Oct 2023 3:39 AM IST

நாடாளுமன்றம் அருகே குண்டுவெடிப்பை தொடர்ந்து சுமார் 1,000 கிளர்ச்சியாளர்களை துருக்கி ராணுவம் கைது செய்தது.

அங்காரா,

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகள் குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அங்கிருந்து கொண்டு துருக்கி நாட்டின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் இவர்களை ஒடுக்க துருக்கி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றம் அருகே சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மற்றொரு பயங்கரவாதியை போலீசார்சுட்டுக்கொன்றனர்.

ஏவுகணை தாக்குதல்

கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ராணுவத்தினர் நடத்திய விசாரணையில் இதற்கு காரணம் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் என்பது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த துருக்கி ராணுவம் வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 முகாம்கள் அழிக்கப்பட்டன. இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 466-வது தாக்குதல் இதுவாகும்.

ராணுவம் தீவிர சோதனை

மேலும் துருக்கியில் உள்ள 16 மாகாணங்களில் ராணுவத்தினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி நிருபர்களிடம் கூறுகையில், `இதேநிலை தொடர்ந்தால் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது இனிமேல் எல்லை தாண்டிய தாக்குதலும் நடத்தப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்