துருக்கி நிலநடுக்கம்: நாட்டை விட்டு தப்பியோடும் கட்டட வடிவமைப்பாளர்கள்..!
|துருக்கியில் கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.
துருக்கி,
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்கள் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். நிலநடுக்கம் என்ற பேரிடரால் கட்டடங்கள் சரிந்து விழுந்திருந்தாலும், முழுமையாக கட்டடங்கள் விழுந்ததற்கு வடிவமைப்பாளர்களே பொறுப்பு என கூறப்படுகிறது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கட்டட வடிவமைப்பாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு தப்ப முயற்சி செய்து வருகின்றனர். தப்பி செல்பவர்களை விமான நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், கட்டடங்கள் தரைமட்டமானதற்கு பொறுப்பானவர்களாக கருதப்படும் நபர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.