துருக்கி குண்டுவெடிப்பு தாக்குதல்; சந்தேக நபர் கைது: துருக்கி உள்துறை மந்திரி
|துருக்கியில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
இஸ்தான்புல்,
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடைகள் அதிகம் நிறைந்த இஸ்திக்லால் பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டு உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறினார். இந்த வீதியில் பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.
இங்கு இதற்கு முன் 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனை தொடர்ந்து, ஆம்புலன்சுகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. போலீசாரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை தொடங்கினர்.
அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடிகுண்டு வைத்த நபர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி சுலேமான் சொய்லு இன்று கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த தாக்குதலை குர்திஸ்தான் போராளிகள் நடத்தி உள்ளனர் என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் பெண் ஒருவர் ஈடுபட்டு இருக்க கூடும் என சம்பவத்திற்கு பின்பு, துருக்கி துணை அதிபர் கூறினார். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார். இந்த சூழலில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.