நாடாளுமன்ற கலவர விசாரணையில் சம்மனை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் வழக்கு தாக்கல்
|நாடாளுமன்ற கலவர விசாரணையில் சம்மனை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் வழக்கு தொடுத்திருப்பது குறித்து நாடாளுமன்ற தேர்வுக்குழு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
அமெரிக்காவில் கடந்த 2020 நவம்பர் 3-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளராக களம் கண்ட அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் தோல்வியைத் தழுவினார்.
அந்த நாட்டு வழக்கப்படி ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக நாடாளுமன்றம் 2021 ஜனவரி 6-ந் தேதி கூடியபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி பெரும் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டது, அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியானது.
இது தொடர்பாக ஜனநாயகக்கட்சி எம்.பி.க்கள் 7 பேர், குடியரசு கட்சி எம்.பி.க்கள் 2 பேரைக்கொண்ட நாடாளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்துகிறது. இந்தக் குழுவின் முன் டிரம்ப் நேரில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணையை எதிர்கொள்வதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் டிரம்ப், முன்தினம் புளோரிடாவில் உள்ள தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த காலங்களில் நாடாளுமன்ற சம்மன்களுக்கு பதில் அளிக்கிற விதமாக சாட்சியம் அல்லது ஆவணங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதிகள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எந்தவொரு ஜனாதிபதியும் அல்லது முன்னாள் ஜனாதிபதியும் அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப்படவில்லை. இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் வக்கீல் டேவிட் ஏ வாரிங்டன் இதுபற்றி குறிப்பிடுகையில், "நீண்டகால முன்னுதாரணங்களும், நடைமுறையும் நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்துவதைத் தடுக்கிறது" என தெரிவித்தார். டிரம்ப் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தவிர்க்க வழக்கு தொடுத்திருப்பது குறித்து நாடாளுமன்ற தேர்வுக்குழு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு அமெரிக்க அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது.