அமெரிக்க அதிபர் தேர்தல்: சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பில் டிரம்ப்- ஜோ பைடன் ஆதிக்கம்
|பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு, கட்சி சார்பில் முதன்மைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சி பிரதிநிதிகளிடையே ஒட்டு மொத்தமாக அதிக செல்வாக்கு பெறும் நபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
தற்போதைய நிலையில், ஜனநாயக கட்சியில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னிலையில் இருக்கின்றனர்.
குடியரசு கட்சியில் தற்போது டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எனினும், டொனால்டு டிரம்ப் பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை தேர்தலில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார். சமீபத்தில் வாஷிங்டனில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நேற்று மிகப்பெரிய அளவிலான முதன்மை தேர்தல் நடத்தப்பட்டது. சூப்பர் செவ்வாய் (சூப்பர் டியூஸ்டே) என அழைக்கப்படும் இந்த நாளில் 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் அதிக பிரதிநிதிகள் கொண்ட கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட 12 மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார். வெர்மான்ட் மாநிலத்தில் மட்டுமே நிக்கி ஹாலே வெற்றி பெற்றார்.
தேர்தல் நடந்த 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். எனவே, குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டிரம்ப் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதேபோல் ஜனநாயக கட்சியில், அதிபர் ஜோ பைடன் பெரும்பாலான பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றிருப்பதால் அவர் போட்டியிடுவதும் உறுதியாகி உள்ளது.