< Back
உலக செய்திகள்
தேர்தல் மோசடி வழக்கில் கைது : 22 நிமிடங்களில் விடுவிக்கப்பட்ட டிரம்ப்
உலக செய்திகள்

தேர்தல் மோசடி வழக்கில் கைது : 22 நிமிடங்களில் விடுவிக்கப்பட்ட டிரம்ப்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:10 AM IST

தேர்தல் மோசடி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டநிலையில் பிணைத்தொகை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (வயது 77) 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை மறைக்க ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜார்ஜியா மாகாண தேர்தலில் இவர் தோல்வியை தழுவினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றனர். இதனால் டிரம்ப் உள்பட 19 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது வாரண்டு

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க ஜார்ஜியா மாகாண கோர்ட்டு முடிவு செய்தது. இதனால் குற்றப்பத்திரிகையில் உள்ள அனைவருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் 25-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா சிறைக்கு டிரம்ப் தாமாக முன்வந்து சரணடைந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த பாதுகாப்புடன் அவர் சிறையில் ஆஜர் செய்யப்பட்டார்.

சிறையில் ஆஜர்

சிறையில் ஆஜரானதும் அவரது அங்க அடையாளங்கள் குறிக்கப்பட்டு கைதி எண்ணும் வழங்கப்பட்டது. பின்னர் ரூ.1 கோடியே 65 லட்சம் பிணைத்தொகையாக வழங்கப்பட்டதால் டிரம்ப் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் சுமார் 22 நிமிடங்கள் சிறையில் இருந்தார்.

இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேறிய டிரம்ப் நியூ ஜெர்சி மாகாணத்துக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், `தான் கைதான இந்த நாள் அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாள்' என தெரிவித்தார். அமெரிக்க வரலாற்றிலேயே கிரிமினல் வழக்குகளை சந்தித்த முதல் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இது டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாலேயே அவர் மீது இதுபோன்ற அவதூறு வழக்குகள் தொடரப் படுவதாக டிரம்பின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்