'அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும்' - வட கொரியா எச்சரிக்கை
|அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
பியாங்யாங்,
அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறுகையில், "வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது. அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லைக் கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து வடகொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம். இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம். அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.