< Back
உலக செய்திகள்
தைவான் நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கம்;  தடம் புரண்ட ரெயில்கள், இடிந்து விழுந்த கட்டிடங்கள்!

Image courtesy; AFP

உலக செய்திகள்

தைவான் நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கம்; தடம் புரண்ட ரெயில்கள், இடிந்து விழுந்த கட்டிடங்கள்!

தினத்தந்தி
|
19 Sept 2022 8:48 AM IST

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்து இருக்கும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி நிலநடுக்கத்தின் தாக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தீவு நாடான தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பல முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.14 மணியளவில் டைடுங் நகரில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் பின்னர் அது 6.8 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் டைடுங் நகரில் உள்ள சிஸ்ஹேங் என்கிற இடத்தில் பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த தைவானும் அதிர்ந்தது. தலைநகர் தைபே உள்பட நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த சிஸ்ஹேங் மற்றும் அதன் அருகில் உள்ள யாலி ஆகிய நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் யாலி நகரில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதனிடையே சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களுக்கு இடையில் உள்ள பூலி என்கிற நகரில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த குலுங்கிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்து இருக்கும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி நிலநடுக்கத்தின் தாக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்