அமெரிக்காவில் அவலம்: துப்பாக்கியை எடுத்து பாட்டியின் முதுகில் விளையாட்டாக சுட்ட சிறுமி...
|அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் சூழலில், கார் இருக்கைக்கு பின்னால் இருந்த பாட்டியின் துப்பாக்கியை எடுத்து 6 வயது சிறுமி அவரை முதுகில் சுட்டு உள்ளார்.
புளோரிடா,
அமெரிக்காவின் புளோரிடாவில் கார் ஒன்றின் பின் இருக்கையில் 6 வயது சிறுமி அமர்ந்து உள்ளார். காரை அவரது பாட்டி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டியின் இருக்கைக்கு பின்னால் இருந்த பகுதியில் அவரது துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு இருந்து உள்ளது.
இதனை சிறுமி எடுத்து, விளையாட்டாக பாட்டியை நோக்கி சுட்டுள்ளார். அதில், இருக்கையை துளைத்து கொண்டு, துப்பாக்கி கொண்டு பாட்டியின் கீழ் முதுகு பகுதியில் நுழைந்து உள்ளது.
இதில், படுகாயமடைந்த 57 வயது பாட்டி, உடனே வண்டியை வீட்டுக்கு ஓட்டி சென்று உள்ளார். அதன்பின்னர், அவசரகால எண்ணான 911-ஐ அழைத்து விபரங்களை கூறியுள்ளார்.
இதன்பின்பு, அவரை வான்வழியே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது.
இதுபற்றி காவல் உயரதிகாரி டாட் கேர்ரீசன் கூறும்போது, துரதிர்ஷ்வடச சம்பவமிது. துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்பதற்கான எடுத்துக்காட்டு இது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பாட்டிக்கு மட்டுமின்றி குழந்தைக்கும் ஊறு விளைவித்து இருக்கும் என்று அவர் சுட்டி காட்டினார். விசாரணைக்கு பின்னர் இந்த துப்பாக்கி சூடு தற்செயலானது என போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது என நீண்டகால குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆண்டுதோறும் துப்பாக்கி வன்முறையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.