< Back
உலக செய்திகள்
ஏமனில் சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிப்பு - ஐ.நா. வரவேற்பு

Image Courtacy: AFP

உலக செய்திகள்

ஏமனில் சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிப்பு - ஐ.நா. வரவேற்பு

தினத்தந்தி
|
4 Jun 2022 2:45 AM IST

ஏமனில் சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு ஐ.நா. வரவேற்பு தெரிவித்துள்ளது.

சனா,

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையே 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா. தீவிர முயற்சிகளை எடுத்து வந்தது. அதன்பலனாக 2 மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பும், அரசும் ஒப்புக்கொண்டன.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி முதல் அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் ஏமனில் கடந்த 2 மாதங்களாக தாக்குதல்களும், உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்தன. ஹூடைடா துறைமுகம் வழியாக எரிபொருள் வினியோகம் அதிகரித்தது. அதேபோல், 6 வருடங்களுக்கு பிறகு தலைநகர் சனாவில் இருந்து வணிக ரீதியிலான விமான போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் சண்டை நிறுத்தம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஏமனுக்கான ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் நேற்று முன்தினம் அறிவித்தார். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்