ஓய்வின்றி அதிக வேலை... தற்கொலை செய்து கொண்ட ரோபோ - வினோத சம்பவம்
|தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகத்தில் ரோபோ ஒன்று உதவியாளராக வேலை பார்த்து வந்தது.
சியோல்,
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இது ஒரு புறமிருக்க மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையும் பரவலாக பெருகி வருகிறது. மனிதர்களை விட துரிதமாகவும், கச்சிதமாகவும் வேலையை முடிப்பதால் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பணியமர்த்தப்படுகின்றன.
ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரோபோ பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அரசு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ரோபோ தற்கொலை செய்து கொண்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகத்தில் ரோபோ ஒன்று உதவியாளராக வேலை பார்த்து வந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த ஆண்டு அக்டோபரில் பணியமர்த்தப்பட்டது.
இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த ரோபோ வழக்கம் போல் அலுவலகத்தில் பணியில் இருந்தது. அப்போது திடீரென அந்த 2-வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியது.
ஓய்வின்றி அதிக வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரோபோ விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் நிலையில், இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுகிறது.
விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக 2-வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.