துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய திக் திக் தருணங்கள்... அதிரும் கட்டிடங்கள்; மாணவனின் அதிர்ச்சி வீடியோ
|துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய பள்ளி மாணவன் எடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
அங்காரா,
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்று சரிந்தன.
இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. துருக்கி நிலநடுக்கம் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களும் ஏற்பட்டு உள்ளன.
நிலநடுக்க பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
துருக்கியில் அதியமான் மாகாணத்தில் அனடோலியன் நகரின் மத்திய பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் தஹா எர்டெம் (வயது 17) என்ற பள்ளி மாணவன் தூங்கி கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கத்தின்போது அவனது குடும்பத்தினர் நன்றாக உறங்கி கொண்டு இருந்து உள்ளனர். இந்நிலையில், அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கி உள்ளன. ஒரு சில வினாடிகளில், தஹா, அவனது பெற்றோர் மற்றும் இளைய சகோதரன், சகோதரி என அனைவரும் கட்டிடங்கள் சரிந்ததில் சிக்கி கொண்டனர்.
தொடர்ந்து, அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. அப்போது, வீட்டின் இடிபாடுகளில் தனியாக சிக்கி கொண்ட அந்த மாணவன் தனது செல்போனை எடுத்து படம் பிடித்து உள்ளான். தனது மரணத்திற்கு பின்னர், அந்த வீடியோ கிடைக்க பெறும் என்ற நம்பிக்கையில் காட்சிகளை பதிவு செய்து உள்ளான்.
அந்த வீடியோவில், உங்களுக்காக கடைசியாக நான் பதிவு செய்யும் வீடியோவாக இது இருக்கும் என நினைக்கிறேன் என கூறியுள்ளான்.
அவனது கையில் இருந்த மொபைல் போன் நடுக்கத்தில் குலுங்குவது போல் காணப்பட்டது. ஆனால், அது நிலநடுக்கத்தினால் ஏற்படுகிறது என வீடியோவில் தஹா கூறுகிறான். தனது இறுதி வார்த்தைகள் என பேசிய அந்த மாணவன், தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் அவனது வருத்தங்களை பற்றி விவரித்து உள்ளான். வீடியோவில் மற்றவர்கள் சிக்கி கொண்டு அலறும் சப்தமும் கேட்கிறது.
அரபி மொழியில் முஸ்லிம்களின் இறை வணக்க பாடல் ஒன்றையும் மாணவன் படிக்கிறான். வருந்துவதற்கு நிறைய விசயங்கள் உள்ளன. எனது பாவங்கள் எல்லாவற்றையும் இறைவன் மன்னிக்கட்டும். இன்று உயிருடன் மீண்டால், செய்வதற்கு பல விசயங்கள் எனக்காக காத்திருக்கின்றன.
நாங்கள் இன்னும் குலுங்கி கொண்டிருக்கிறோம். ஆம். எனது கைகள் குலுங்கவில்லை. அது நிலநடுக்கம் என கூறுகிறான். பலருடன் சேர்ந்து தனது குடும்பமும் மரணித்திருக்க கூடும் என அந்த தருணத்திலும் மாணவன் குடும்பம் பற்றி நினைவுகூர்கிறான்.
எனினும், 2 மணிநேரத்திற்கு பின்னர், அண்டை வீட்டுக்காரர்கள் அந்த மாணவனை மீட்டு, உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவனது பெற்றோர், சகோதர, சகோதரிகளையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கைகளில் கிடைத்த பொருட்கள் மற்றும் தங்களது கைகளாலேயே, மீட்டு வெளியே இழுத்து கொண்டு வந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் பின்னர், அரசு வழங்கிய கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.