அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
|அமெரிக்காவில் மீண்டும் தொடரும் சம்பவமாக, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி நடன பயிற்சி மையத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கட்கிழமை கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அமெரிக்காவே அதிர்ந்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆனாலும் அந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் 18 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பல மணி நேரத்துக்கு பிறகு அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.