தூக்க மருந்து கொடுத்து... அமெரிக்காவில் கடத்தலுக்கு ஆளாகும் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள்; அடுத்து நடக்கும் கொடூரம்
|அமெரிக்காவில் கடத்தலில் சிக்கும் சிறுவர் சிறுமிகளில் பலர் குழந்தை தொழிலாளர்களாகவோ அல்லது பாலியல் தொழிலாளி, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
நியூயார்க்,
அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் மக்களிடையே சிறுவர், பெரியவர் வேற்றுமையின்றி துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டிற்குள் தூக்க மருந்து கொடுத்து 8 முதல் 10 வயதுடைய சிறுவர் சிறுமிகளை கடத்தி செல்லும் நிகழ்வும் அதிகரித்து காணப்படுகிறது.
அவர்களை கடத்தும் நபர்கள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான பெற்றோர் கிடையாது. இதுபோன்று நிறைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழையும் நபர்களை எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில், இந்த கடத்தல் சம்பவங்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
நாங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு, கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் அமெரிக்காவுக்குள் கடத்தி கொண்டு வரப்படுகின்றனர் என போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். எனினும், கடத்தி வரப்பட்ட பின்னர், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாகவோ அல்லது பாலியல் தொழிலாளி, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
இதில் ஒரு சம்பவம் பற்றி கலிபோர்னியாவின் தென்கிழக்கே அமைந்த எல் சென்டிரோ பிரிவை சேர்ந்த, எல்லை ரோந்து பணிக்கான காவல் துறை தலைவரான கிரிகோரி பொவினோ என்ற காவல் அதிகாரி கூறும்போது, காவலர்கள் ஒரு குழந்தையை கலிபோர்னியா எல்லையில் மீட்டனர். அந்த சிறுவனுக்கு தூக்க மருந்து அதிகளவில் கொடுக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகளிடம் அவனால் பேச கூட முடியவில்லை. கடத்தல்காரர்கள் நிறைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை வைத்திருந்தனர் என்றார்.
இதேபோன்று கடந்த ஆகஸ்டு இறுதியில் கூட மார்லென் கான்ட்ரிராஸ் லோபஸ் (வயது 28) என்ற பெண்ணை அரிசோனா மாகாணத்தின் சான் லூயிஸ் நகரின் நுழைவு பகுதியில் வைத்து கைது செய்தனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற அரிசோனா பெண்ணான அவர், காரில் 2 குழந்தைகளை வைத்திருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு அதிகளவில் தூக்க மருந்து கொடுத்து இருந்தது தெரிய வந்துள்ளது.
தொடக்க கட்ட விசாரணையில், அந்த குழந்தைகள் தனக்கு உறவுமுறை என லோபஸ் கூறியுள்ளார். விசாரணையின்போது, அவர்களை ோபஸ் எழுப்பவும் முயன்றிருக்கிறார்.
தொடர்ந்து விசாரணைக்காக அவரை காரில் இருந்து வெளியே அழைத்தபோது, சிறுவர்களில் ஒருவர் நடக்கவே திணறுவது தெரிந்தது. சிறுவர்களில் மற்றொருவரை தூக்கி கொண்டு வரவேண்டியிருந்தது. அவர்களிடம் விசாரித்ததில், லோபசுக்கும், 11 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களுக்கும் எந்த குடும்ப உறவும் இல்லை என தெரிய வந்தது.
சிறுவர்கள் இருவரும் தெற்கு மெக்சிகோவின் மிச்சோவாகன் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் என போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களுடைய தாயார் மெக்சிகோவிலேயே இருக்கிறார். தாயார் அவருடைய ஆண் நண்பருடன் தங்களை ஒன்றாக அனுப்பினார் என சிறுவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து லோபஸ் மீது கடத்தல் குற்றச்சாட்டு பதிவானது. குழந்தைகள் இருவரும் மெக்சிகோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவில் பைடன் ஆட்சியில், சட்டவிரோத வகையில் உறவினர்கள் இன்றி நுழையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. அதன்பின்னர் அந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளின் நிலை என்பதும் தெரிய வரவில்லை.
2024 மே மாதம் வரை, 2.9 லட்சம் புலம்பெயர் குழந்தைகள் வந்துள்ளனர். ஆனால் அவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை. அவர்களுடனான தொடர்பையும் அமெரிக்க அதிகாரிகள் இழந்து விட்டனர். இதுபோக, 32 ஆயிரம் குழந்தைகள் அமெரிக்காவில் புகுந்துள்ளனர் என்றும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த தவறி விட்டனர் என்றும் அதுபற்றிய 14 பக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.