< Back
உலக செய்திகள்
நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களுக்கு... - வாக்னர் தலைவர் பிரிகோஜின் வீடியோவால் பரபரப்பு
உலக செய்திகள்

'நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களுக்கு...' - 'வாக்னர்' தலைவர் பிரிகோஜின் வீடியோவால் பரபரப்பு

தினத்தந்தி
|
1 Sept 2023 11:42 AM IST

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது.

மாஸ்கோ,

ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர்.

இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆனால் இவர் திடீரென அதிபர் புதினுக்கு எதிராக புரட்சியில் இறங்கினார். அப்போது ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றியது.

பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாக்னர் குழுவின் கிளர்ச்சி கைவிடப்பட்டது. மேலும், வாக்னர் குழுவிற்கும் அந்த குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கும் ரஷியா பொது மன்னிப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷியா வந்தார். கடந்த 24-ம் தேதி தனியார் விமானம் மூலம் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றார். அப்போது, பிரிகோஜின் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தது உறுதியானதாக ரஷியா தெரிவித்தது. இந்த விமான விபத்து திட்டமிட்ட தாக்குதல் என பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக ரஷியா அறிவித்த நிலையில் பிரிகோஜினின் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய பிரிகோஜின், நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களிடம் நான் எப்படி இருக்கிறேன் என கேட்கிறேன். தற்போது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரம், நான் ஆப்பிரிக்காவில் உள்ளேன்.

தற்போது வரை என்னையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும், நான் சம்பாதித்ததையும், இன்னும் பலவற்றையும் அழிக்க நினைப்பவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் அனைத்தும் சரியாக உள்ளது' என்றார்.

வாக்னர் குழு தலைவர் உயிரிழந்துவிட்டதாக ரஷியா அறிவித்த நிலையில் பிரிகோஜின் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவால் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உயிரோடு உள்ளாரா? அல்லது அவர் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.



மேலும் செய்திகள்