< Back
உலக செய்திகள்
போருக்கான சகாப்தம் இதுவல்ல; புதினுக்கு தெளிவுப்படுத்திய பிரதமர் மோடி:  அமெரிக்கா புகழாரம்
உலக செய்திகள்

போருக்கான சகாப்தம் இதுவல்ல; புதினுக்கு தெளிவுப்படுத்திய பிரதமர் மோடி: அமெரிக்கா புகழாரம்

தினத்தந்தி
|
19 Nov 2022 1:42 AM GMT

ரஷிய-உக்ரைன் போர் சூழலில், போருக்கான சகாப்தம் இதுவல்ல என்ற செய்தியை ஜி-20 கூட்டறிக்கையில் சேர்ப்பதற்கு பிரதமர் மோடி முக்கிய பங்காற்றினார் என அமெரிக்கா புகழ்ந்து உள்ளது.



வாஷிங்டன்,


ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நீடித்து வரும் நீண்ட கால போரானது முடிவுக்கு வராத சூழல் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து வரும் போரால் சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதினுடன் நடந்த இருதரப்பு சந்திப்பின்போது, போருக்கான சகாப்தம் இதுவல்ல என பிரதமர் மோடி கூறினார்.

இந்த சூழலில், சமீபத்தில் இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து முடிந்தது. அதன் கூட்டறிக்கையில், அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கும் சர்வதேச சட்டம் மற்றும் பலதரப்பு நடைமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், போருக்கான சகாப்தம் இதுவல்ல என்ற பிரதமர் மோடி, புதினிடம் கூறிய செய்தியும் சேர்க்கப்பட்டு அறிக்கை வெளியானது.

இதனை குறிப்பிட்டு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கேரீன் ஜீன்-பியார்ரே பேசும்போது, நாம் ஒரு வெற்றிகர ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபரிடம், அதிபர் பைடன் பேசியுள்ளார்.

இருதரப்பும் ஏற்று கொள்ள கூடிய வகையிலான உச்சி மாநாட்டின் இறுதி அறிவிப்புக்கு, இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்தது. போருக்கான சகாப்தம் இதுவல்ல என பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி விட்டார் என பியார்ரே கூறியுள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றம் நிறைந்த போர் சூழலில், கூட்டறிக்கை வழியே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது என்ற அடிப்படையில் பியார்ரே பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்