"அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த யாருக்கும் இதுபோல் நடந்ததில்லை" - எப்.பி.ஐ. சோதனை குறித்து டிரம்ப் கருத்து
|தனது எஸ்டேட்டுக்குள் நுழைய எப்.பி.ஐ. அதிகாரிகள் தன்னை அனுமதிக்கவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான 'மர்-எ-லாகோ' என்ற எஸ்டேட், புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்து அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' என்ற சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றிய அவரது அறிக்கையில், புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சோதனை தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க நீதி துறையோ, டிரம்பின் அதிபர் பதவி காலம் நிறைவடைந்த பின்னர், அவர் சில முக்கிய ஆவணங்களை இந்த எஸ்டேட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தனது எஸ்டேட்டுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவர்கள் என்னையும், எனது வழக்கறிஞர்களையும் எனது எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கின்றனர்.
எஸ்டேட்டில் இருந்த அனைவரையும் அவர்கள் வெளியே அனுப்பி விட்டனர். அவர்கள் செய்வது எதையும் நாங்கள் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் சோதனை செய்கிறார்களா, எதையாவது எடுக்கிறார்களா, அல்லது வைக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வாறு இருக்காது என நம்புகிறேன். இதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த யாருக்கும் இது போல நடந்தது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.