< Back
உலக செய்திகள்
உலகின் மிக கடினம் வாய்ந்த துள்ளலான நடனம்; வைரலாகும் வீடியோ
உலக செய்திகள்

உலகின் மிக கடினம் வாய்ந்த துள்ளலான நடனம்; வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
14 Jan 2023 11:02 AM IST

ஆப்பிரிக்காவின் ஜாவுலி என்ற பாரம்பரிய நடனம் உலகின் மிக கடினம் வாய்ந்த நடனங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.


ஐவரி கோஸ்ட்,


மேற்கு ஆப்பிரிக்காவில் கோட் டி ஐவாயர் பகுதியில் குரோ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களது தனித்துவம் வாய்ந்த, பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஜாவுலி என்ற துள்ளலான நடனம், மின்னல் வேக அசைவுகளை கொண்டது.

இதில், கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில், இசைக்கேற்ப கால்களை விரைவாக அசைக்கும்போது, முழு உடலையும் சமநிலையில் வைத்திருக்கும் கலையின் ஓர் வடிவம் ஆக அது திகழ்கிறது. இதனை ஆட கூடிய நபர் தனது கால்களை விரைவாக அசைத்து, உடலின் மேல் பகுதியை அசையாமல் வைத்திருக்கிறார். அப்படியே திடீரென வேறு பக்கமும் விரைவாக திரும்பி, தொடர்ந்து ஆடுகிறார்.

20-க்கும் மேற்பட்ட வடிவிலான முக கவசங்கள் அணிந்தபடி ஆடப்படும் இந்த நடனத்தில் பல ஸ்டெப்புகளும் (நடன அசைவுகள்) ஒரே வடிவிலானது போன்று தோன்றினாலும், குறிப்பிட்ட அசைவு நடனத்தின்போது, மீண்டும் ஆடப்படுவதில்லை என்பதும் இதன் சிறப்பம்சம் ஆகும்.

இதனால், உலகின் மிக கடினம் வாய்ந்த மற்றும் சாத்தியமற்ற ஒரு நடனம் என பலரும் இதனை ஒப்பு கொள்ள வைத்து உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 1.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். விமர்சனங்களையும் பகிர்ந்து உள்ளனர்.

இந்த நடனம் வழியே, சமூகத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஒரு செய்தியை பரப்பும் கருவியாக இந்த பழங்குடியினர் வைத்திருக்கின்றனர். ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலும், கலாசார அடையாளத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் ஒன்றாகவும் இந்த நடனம் உள்ளது.

ஆடவர்கள் மட்டுமே ஆட கூடிய இந்த நடனத்தில் தேர்ச்சி பெற ஒருவருக்கு 5 ஆண்டுகள் எடுக்கும். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் உதவியுடனேயே அவர்கள் இதனை கற்கின்றனர். அதனாலேயே, தவறுகள் இன்றி மிக விரைவாக அவர்களால் நடனம் ஆட முடிகிறது.



மேலும் செய்திகள்